×

சென்னையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்கு ரூ54 கோடியில் நவீன இயந்திரங்கள்: கொள்முதல் செய்ய அரசாணை வெளியீடு

சென்னை: ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ரூ54.60 கோடிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டால், அதில் மனிதர்கள் இறங்கி சரி செய்யும் வழக்கம் பல ஆண்டாக இருந்து வந்தது. அவ்வப்ேபாது, கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி கழிவுநீர் தொட்டிக்குள் இனி மனிதர்கள் இறங்கக்கூடாது என்றும், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பல்வேறு வழிமுறைகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தியது.

ஏற்கனவே கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என்ற உத்தரவு இருந்தாலும், அதனை பலரும் மதிப்பதில்லை. குறிப்பாக வீடுகளில் சிறிய அளவிலான அடைப்பு ஏற்படும்போது அவர்கள் கழிவுநீரகற்று வாரியத்தை தொடர்பு கொள்ளாமல், தன்னிச்சையாக ஆட்களை வைத்து கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இது போன்ற உயிரிழப்புக்கள் அதிகளவில் ஏற்பட்டது. எனவே இவை அனைத்தையும் ஆராய்ந்து கழிவுநீரகற்று வாரியம் சார்பில் பல்வேறு திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 14420 என்ற தேசிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அல்லது தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கழிவுநீரை வெளியேற்ற மேற்கண்ட பொதுவான எண்ணில் புகார் செய்ய வேண்டும்.

அவ்வாறு புகார் செய்யும்போது புகார் செய்யும் நபருக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதன் பிறகு அவர் எந்த பகுதியில் உள்ளாரோ, அந்தப் பகுதிக்கு அந்த புகார் மாற்றப்பட்டு உடனடியாக கழிவுநீரகற்று வாரியத்தில் இருந்து லாரி மூலம் ஊழியர்கள் சென்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வார்கள். சுத்தம் செய்த பின்பு அந்த நீரை பம்பிங் ஸ்டேஷன் எனப்படும் நிலையத்திற்கு எடுத்துவந்து அதனை வெளியேற்றிவிட்டு சம்பந்தப்பட்ட ஊழியரிடம் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும். அவர்கள் புகார் செய்த நபரை தொடர்பு கொண்டு ஊழியர்கள் வந்து பிரச்னையை சரி செய்து விட்டார்களா எனக் கேட்டு அவர்கள் அந்த ஓடிபி எண்ணை கூறிய பிறகுதான், அந்த புகார் முழுவதுமாக சரி செய்யப்பட்டது என எடுத்துக் கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கு எளிமையான முறையில் புகார்களை தீர்க்க இந்த தேசிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கழிவுநீரை இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்து கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கழிவுநீரகற்று வாரிய ஊழியர்களுக்கு கை கவசம், முகக் கவசம், ஹெல்மெட் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் உடைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், கழிவு நீரை எடுத்துவிட்டு அதனை மீண்டும் வந்து பம்பிங் ஸ்டேஷனில் விடும்போது எந்த மாதிரியான நடைமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்கு, ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ரூ54.60 கோடிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், பொதுமக்களுக்கான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி, 85.66 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய சென்னையில் 5,055 கி.மீ நீளமுள்ள நீர்வழி மற்றும் 4.149 கி.மீ உள்ள கழிவுநீர் பாதையை பராமரித்து வருகிறது. அதேபோல, பொதுமக்களுக்கான தரமான குடிநீரை வழங்குவதையும் கழிவுகளை அகற்றுவதில் பாதுகாப்பான முறைகளை இலக்காக கொண்டு செயல்படுகிறது. மேலும் தூய்மை பணியாளர்கள் கைகளால் கழிவுகளை அகற்றுவதற்கு தடை மற்றும் அவர்களின் மறுவாழ்விற்கான சட்டத்தின்படி, நவீன உபகரணங்களை பயன்படுத்தி சாக்கடை சுத்தம் செய்தற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

அதன்படி, ஏற்கனவே கழிவுநீரை அகற்ற பயன்படுத்தி வரும் இயந்திரங்களில் கால அளவு மற்றும் தேய்மானத்தை கருத்தில் கொண்டு ஸ்வச் பாரத் மிஷன் கீழ், 66 இயந்திரங்களை ரூ54.60 கோடிக்கு கொள்முதல் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் கழிவுநீர் அமைப்பில் அந்த இயந்திரங்களை பயன்படுத்துவதில் மேற்கொள்ளப்படும் செயல்பாடு மற்றும் பராமரிப்பு மாதிரியை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டு சிறை தண்டனை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தூய்மை பணிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின்றி விதிகளை மீறி கழிவு நீரகற்றும் பணிகளில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தும் உரிமையாளர், ஒப்பந்ததாரர், பணி அமர்த்துபவர் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறப்புக் குழுக்கள் ஆய்வு
கழிவு நீரகற்றும் பணிகளை இயந்திரங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பயிற்சிகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் மறைமலைநகர் ஆகிய இடங்களில் இதுவரை 3064 லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

16 லாரிகள் பறிமுதல்
சட்டவிரோதமாக உரிமம் பெறாமல் கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்றினால் முதன்முறை விதிமீறலுக்கு ரூ25,000 அபராதமும், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ரூ50,000 அபராதமும், தொடர்ந்து விதிமீறும் லாரிகளை உரிய சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி செயல்பட்ட 16 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சென்னையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்கு ரூ54 கோடியில் நவீன இயந்திரங்கள்: கொள்முதல் செய்ய அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Water Supply and Sewerage Board ,
× RELATED சென்னை குடிநீர் வழங்கல் மற்றும்...